×

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம்: வனத்துறை உத்தரவு

சேந்தமங்கலம்: கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக கொல்லிமலை உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறை காட்சி முனையம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனிடையே, பராமரிப்பு காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த பணிகள் நிறைவு ெபற்றதையடுத்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு, நுழைவாயில் உள்ள சோதனை சாவடியில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை அங்குள்ள மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை செய்து, நல்ல உடல் நிலையில் உள்ளவர்களை மட்டுமே, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பார்க்கவும் அனுமதி வழங்கினர். உடல்நலம் பாதித்தவர்களை திருப்பி அனுப்பினர்.

நேற்று பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் பல்ேவறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, கொல்லிமலை அன்னாசி, வாழைப்பழம், பலா ஆகியவற்றை வாங்கி சென்றனர். மாசிலா அருவியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சுற்றுலா பயணிகளை குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம்: வனத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kollimalai Agaya Ganga Falls ,Senthamangalam ,Kollimalai Agayakangai ,Namakkal ,Kollimalai Agaya Ganga ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்